வூஹான்: மக்களை திரும்ப அழைக்க தனி விமானங்கள்

தோக்கியோ: வூஹான் கிருமித்தொற்று பரவலைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு மத்தியில், சில நாடுகள் வூஹானி லிருந்து  வரும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளன. சில நாடுகள் அங்கிருக்கும் தங்கள் குடிமக்களை தங்கள் நாடுகளுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றன.

‘கொரோனோ’ வைரஸ் கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, வூஹான் உள்ளிட்ட சில சீன நகரங்களில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வெளிநாட்டவர் உள்ளிட்டோர்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா, வூஹானில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பும் அனைத்து ஜப்பானியர்களுக்கும்  தனி விமானம் ஏற்பாடு செய்ய, சீன அதிகாரிகளுடன் அரசாங்கம்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அதேபோல் வூஹானில் இருக்கும் நூற்றுக்கணக்கான பிரான்ஸ் நாட்டவர்களையும்   அழைத்து வருவதற்கான விமான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

அவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

சீன பயணிகளுக்குத் தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அமெரிக்காவும் வூஹானில் வசிக்கும் தன் குடிமக்களையும்  பணியாளர்களையும் திரும்ப அழைத்து வர தனி விமானங்களை ஏற்பாடு செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.