மலேசிய போலிஸ்: சிங்கப்பூரர் மாரடைப்பால் இறந்தார்; கொரோனா வைரஸ் தொற்றால் அல்ல

மலேசிய போலிஸ்: சிங்கப்பூரர் மாரடைப்பால் இறந்தார்; கொரோனா வைரஸ் தொற்றால் அல்ல

2 mins read
2a0ed19d-6878-4431-bddd-ffcc954c0828
மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆடவர். படம்: தி ஸ்டார் -

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் குப்பாங் பகுதியில் உள்ள சுல்தான் அபு பக்கர் சோதனைச் சாவடியில் சுற்றுப்பயணப் பேருந்து ஒன்றில் ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தது வூஹான் 'கொரோனா' வைரஸ் தொற்றால் அல்ல என்று மலேசிய போலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அந்த 78 வயது ஆடவர் சீன நாட்டவர் என வதந்திகள் பரவிய நிலையில், அவர் சிங்கப்பூரர் என இஸ்கந்தர் புத்திரி பகுதியின் உதவி ஆணையர் ஸுல்கைரி முக்தர் கூறினார்.

இரண்டாம் இணைப்புப் பாலம் அருகே உள்ள சுல்தான் அபு பக்கர் சோதனைச் சாவடியில் குடிநுழைவு அதிகாரியிடமிருந்து அன்று காலை 7.05 மணியளவில் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக திரு முக்தர் சொன்னார். சோதனைச் சாவடியில் குடிநுழைவுச் சோதனைக்காக அந்தச் சுற்றுப்பயணப் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தபோது சிங்கப்பூர் ஆடவர் அப்பேருந்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்தது தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக திரு முக்தர் கூறினார்.

"அந்த ஆடவரும் அவரது 68 வயது மனைவியும் சிங்கப்பூரிலிருந்து ஜெண்டிங் ஹைலண்ட்ஸ் பகுதிக்கு பயணம் மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

"சோதனைச் சாவடியில் பேருந்து நின்றபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக அந்த ஆடவர் தனது மனைவியிடம் கூறினார்," என்று திரு முக்தர் சொன்னார்.

சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த ஆடவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக திரு முக்தர் கூறினார். அந்த ஆடவருக்கு இதய நோய் இருந்ததாகவும் அது தொடர்பில் சிங்கப்பூரில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

"இச்சம்பவம் குறித்த தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தாங்கள் பெறும் செய்தி உண்மையானதுதானா என்பதை உறுதிசெய்த பிறகே அதைப் பகிருமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

"குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 505 (பி) சட்டப்பிரிவின் கீழ் பொய்ச் செய்தியைப் பரப்பிய நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்," என்றார் திரு முக்தர்.

குற்றம் நீருபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.