வூஹான் வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 106ஆக உயர்ந்தது; உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 4,500ஐ கடந்தன

வூஹான் வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 106ஆக உயர்ந்தது; உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 4,500ஐ கடந்தன

1 mins read
96c62810-2ab1-4074-a76c-760a9ce5b7da
படம்: ஏஃப்பி -

வூஹான் 'கொரோனா' வைரஸ் தொற்றால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 106ஐ எட்டியதாக சீன சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்தது.

அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 4,562ஆக உயர்ந்திருப்பதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் கூறியது. எனினும், இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வைரஸ் தொற்றின் மையப் பகுதியான ஹூபெய் மாநிலத்தில் மட்டும் குறைந்தது 2,714 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன.

உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஒருபுறமிருக்க, வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 7,000 புதிய சம்பவங்கள் பதிவாகியதாக சீன சுகாதார ஆணையம் கூறியது.

வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் வேளையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைப் பரிசீலிக்குமாறு சீன தேசிய குடிநுழைவு நிர்வாகம் தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டது.

ஹூபெய் மாநிலத் தலைநகர் வூஹானின் மக்கள்தொகை ஏறத்தாழ 11 மில்லியனாக உள்ளது. அங்கு பொதுப் போக்குவரத்துக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 மில்லியன் பேரைக் கொண்டுள்ள ஹூபெய் மாநிலத்தில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சீனா முழுவதும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வைரஸ் கிருமியை எதிர்கொள்ள ஹூபெய் மாநிலத்திற்கு கிட்டத்தட்ட 6,000 மருத்துவ ஊழியர்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.