மலேசியாவின் அனைத்து குடிநுழைவு வாயில்களிலும் சுகாதாரப் பரிசோதனை தீவிரம்

மலேசியாவின் அனைத்து குடிநுழைவு வாயில்களிலும் சுகாதாரப் பரிசோதனை தீவிரம்

2 mins read
fa9f029d-e0e0-4c99-ae5b-0a2fd7397d59
மலேசியாவின் மொத்தம் 64 குடிநுழைவு வாயில்களிலும் சுகாதாரப் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. (படம்: ஏஃப்பி) -

கோலாலம்பூர்: மலேசியா அதன் அனைத்து குடிநுழைவு வாயில்களிலும் சுகாதாரப் பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. வூஹான் 'கொரோனா' வைரஸ் பரவுவதைத் தடுப்பது அதன் நோக்கம்.

சளி, இருமல், காய்ச்சலோடு வரும் பயணிகளைக் கண்டுபிடிக்க, குடியேற்ற முகப்புகள் அனைத்திலும் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கும் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.

துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் உள்ள சுல்தான் அபு பக்கர் சோதனைச் சாவடிக்கு நேற்று வருகை புரிந்த அவர், இதனை தெரிவித்தார்.

மலேசியாவில் மொத்தம் 64 குடிநுழைவு வாயில்கள் உள்ளன.

பயணிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால், சுகாதாரப் பரிசோதனை அறைகளில் அவர்கள் பரிசோதிக்கப்படுவர். பின்னர், ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா ஆமினா மருத்துவமனையில் தொற்றுநோய்களைக் கையாளும் மருத்துவக் குழுவிடம் பயணிகள் ஒப்படைக்கப்படுவர் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

நேற்று நிலவரப்படி மலேசியாவில் நால்வருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள்.

ஜோகூரில் மட்டும் ஆறு குடிநுழைவு வாயில்கள் இருப்பதை டாக்டர் நூர் ஹிஷாம் சுட்டினார். அவற்றில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்ல வகைசெய்யும் உட்லண்ட்ஸ் கடற்பாலமும் துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலமும் அடங்கும்.

கடந்த ஆண்டு இரண்டாம் இணைப்புப் பாலம் வழியாக மட்டும் நாள் ஒன்றுக்கு 3,000லிருந்து 3,500 வரையிலான சீனப் பயணிகள் மலேசியாவுக்குள் நுழைந்ததாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுப்பயணப் பேருந்துகள் மூலம் ஜெண்டிங் ஹைலண்ட்ஸ் பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

துவாஸ் குடிநுழைவுச் சோதனைச்சாவடியைக் கடந்து ஜோகூர் பக்கம் உள்ள சோதனைச்சாவடியில் சீனப் பயணிகளுக்கென தனிப்பட்ட ஒரு குடிநுழைவுத் தடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாநிலத்தைச் சேர்ந்த சீன நாட்டவர்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. எனினும், வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், அந்நாட்டிற்குள் நுழைய அனைத்து சீனப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற மலேசியர்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு குரல் கொடுக்கும் வகையில் கடந்த வாரயிறுதியில் 360,000க்கும் அதிகமானோர் இணைய மனு ஒன்றில் கையெழுத்திட்டனர்.