வூஹான் கிருமியைக் கட்டுக்குள் கொண்டுவர மாதங்கள் ஆகும்

2 mins read
9b7e7a8a-9fd2-48dd-aa70-91f92491d671
பாதுகாப்பு உடையணிந்திருக்கும் மருத்துவ ஊழியர் ஒருவர், சீனாவின் யூயாங் நகரத்துக்கு வெளியே உள்ள சோதனைச்சாவடியில் காருக்குள் இருக்கும் பயணியின் உடல் வெப்பத்தைச் சோதிக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: உயிர்க்கொல்லி வூஹான் கிருமியைக் கட்டுக்குள் கொண்டு வர மாதங்களாகும் என்றும் பத்தாயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் முதற்கட்ட தரவுகளை வைத்து தெரிவித்துள்ளனர்.

"கோடைக் காலத்தில் இந்தக் கிருமிகள் மடியக்கூடும் என்பதே இப்போது இருக்கும் சிறந்த கணிப்பு," என்றார் கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் ஃபிஸ்மன்.

"இது அடுத்த வாரமோ அடுத்த மாதமோ முடியக்கூடிய விவகாரம் அல்ல," என்கிறார் நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலேசாண்ட்ரோ வெஸ்பிக்னானி.

தொற்றுநோய் நிபுணர்களுக்கும் இந்தக் கிருமியை விரைவில் கட்டுப்படுத்தும் வழிகள் தெரியவில்லை. டிசம்பரில் தோன்றிய புதிய கிருமி பற்றிய சிறிய அளவிலான தகவல்களே உள்ளன.

கடந்த வார இறுதி வரை, இது மனிதனிடமிருந்து மனிதனுக்குத் தொற்றும் நோய் என்று தெரியவில்லை. அதற்கான அறிகுறிகளான காய்ச்சல், மூச்சுத்திணறல், நிமோனியா போன்றவை தென்படத் தொடங்கியது.

இது மனிதனுக்கு மனிதன் தொற்றும் நோய்தான் என்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா உறுதிப்படுத்தியது.

ஆனால், அறிகுறியற்ற ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இக்கிருமி தொற்றும் என்ற ஆதாரம் தென்படவில்லை என்று அமெரிக்க சுகாதார அமைப்புகள் கடந்த திங்கட்கிழமை கூறின.

இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்துதல் என்று முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் சராசரி எண்ணிக்கையைக் குறைக்கும்.

ஆனால், சீனாவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகளின் பலனை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு உணர்ந்துகொள்ள முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இந்தக் கிருமியைப் பற்றி பல தகவல்களை அறியும்போது, இது கிட்டத்தட்ட சார்ஸ் கிருமியைப் போன்று இருப்பதை உணர முடிகிறது.

"சார்ஸ் கிருமியைக் கட்டுப்படுத்தலாம். அதுபோல் இந்தக் கிருமியையும் கட்டுப்படுத்தி விடலாம் என்று நம்புவோம். ஆனால் இது சாத்தியமா என்பதை இன்னும் சில வாரங்களுக்குப் பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும்," என்று பேராசிரியர் ஃபிஸ்மன் சொன்னார்.

இதற்கிடையே, வூஹான் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்தக்கூடியவை என்று நம்பப்படும் 30 மருந்துகளை சீன ஆராய்ச்சியாளர்கள் இப்போது சோதித்து வருகின்றனர் என்று சீன அறிவியல் பயிற்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகளைக் கொண்டு கூடுதல் பரிசோதனைகள் செய்து அவை கொரோனா கிருமிக்கு எதிராக செயல்பட முடியுமா என்பதைக் கண்டறிவார்கள் என்றும் கழகம் விவரித்தது.