அமெரிக்கா: விமானத்தை எதிரிகள் வீழ்த்தியிருக்கலாம்

1 mins read
b1d75795-fc70-4031-95f8-8279c475dc95
ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் தன்னுடைய ராணுவ விமானம் என்று அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. படம்: இணையம் -

காபூல்: ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம் தங்களுடையது என்றும் அது எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தெஹ் யாக் மாவட்டத்தில் E-11A என்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.

"விமானம் தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விமானம் எதிரிகளால் வீழ்த்தப்பட்டதா என்று விசாரணை நடந்து வருகிறது," என்றார்.

இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.

இந்த நிலையில் அமெரிக்க விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது என்றும் அதில் பயணம் செயத் அமெரிக்க உயரதிகாரிகள் மாண்டுவிட்டதாகவும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காஸ்னி மாகாணத்தில் குளிர் காரணமாக பனி படர்ந்துள்ளதால் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆப்கான் ஊடகங்கள் கூறின.