வாஷிங்டன்: பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்மொழிந்துள்ள மத்திய கிழக்கு சமாதானத் திட்டத்தினை 'சதித்திட்டம்' என்று பாலஸ்தீனம் சாடியுள்ளது.
வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுடன் நேற்று நடந்த சந்திப்பின்போது டிரம்ப் இந்த திட்டத்தினை முன்மொழிந்தார்.
இஸ்ரேலின் தனிப்பட்ட தலைநகராக ஜெருசலமை பேணும் யோசனையுடனான மத்திய கிழக்கு சமாதான திட்டத்தையும் டிரம்ப் அப்போது முன்மொழிந்துள்ளார்.
இஸ்ரேலின் இறையாண்மையை பறைசாற்றும் வகையில் மேற்குக் கரை குடியேற்றங்களுக்கு மேலதிகமாக சுதந்திரமான பாலஸ்தீனிய மாநிலமொன்றை டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
பாலத்தீன தரப்புக்குக் கிழக்கு ஜெருசலத்தில் ஒரு தலைநகரை முன்மொழிந்துள்ள அமெரிக்கா, இங்கு தங்களின் தூதரகத்தைத் திறக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தமது முன்மொழிவு பாலஸ்தீனியர்களுக்கு இறுதி வாய்ப்பாக அமையக்கூடும் எனவும் அவர் சொன்னார்.
ஆனால், டிரம்ப்பின் இத்திட்டத்தை நிராகரித்துள்ள, பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்த முன்மொழிவு 'சதித் திட்டம்' என்று சாடியுள்ளார்.
ஜெருசலம் மற்றும் தமது உரிமைகள் விற்பனைக்கு அல்லவெனவும், பேரம் பேசி இதில் எதனையும் பெறமுடியாது எனவும் இதுபோன்ற சதி ஆலோசனைகள் வெற்றிபெறாது எனவும் டிரம்ப், நெட்டன்யாஹுவிற்குக் கூறிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரையில் தமது படைகளை மீண்டும் நிறுத்தியது. இதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் காசாவில் போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இரு தரப்பும் ஜெருசலம் தொடர்பாக தொடர்ந்து உரிமை கோருகின்றன. 1976 போரின்போது இஸ்ரேல் ஆக்கிரமித்ததாகக் கூறும் பாலஸ்தீனம் அந்நகரை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

