திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றன.
டெல்லியில் நேற்று முன்தினமும் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் திரளாகப் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே, கேரளா சட்டப்பேரவையில் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில ஆளுநர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரள பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையாற்ற வந்தார். எனினும் அவரை அவைக்குள் வரவிடாமல் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

