வூஹான்: தனிமைப்படுத்தப்பட்ட தந்தை; கவனிப்பாரின்றி உயிரிழந்தார் பெருமூளை வாதம் கொண்ட இளைஞர்

வூஹான்: தனிமைப்படுத்தப்பட்ட தந்தை; கவனிப்பாரின்றி உயிரிழந்தார் பெருமூளை வாதம் கொண்ட இளைஞர்

1 mins read
b66529c9-0840-4a0c-918c-da67ebf4a4a0
வூஹான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சந்தேகத்தின்பேரில் ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் மருத்துவப் பணியாளர்கள். படம்: ஏஎஃப்பி -

தந்தையும் இளைய சகோதரனும் வூஹான் கிருமித் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததையடுத்து, பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞர் வீட்டில் தனித்து விடப்பட்டிருந்ததால், கவனிக்க யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹுபெய் வட்டாரத்தில் வசித்து வந்த 49 வயதான தந்தை யான் ஸீயாவென், ஆட்டிசம் குறைபாடுள்ள 11 வயதான இளைய சகோதரன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு நாட்களில் யான் செங் என்ற அந்த இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அவரது தந்தை வூஹானில் பணிபுரிந்துகொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட மகன் வீட்டில் தனித்து இருப்பதைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் உதவி கோரினார் திரு யான்.

ஆனால், அந்த கோரிக்கை வைக்கப்பட்டதற்கு அடுத்த நாளே இளைஞர் உயிரிழந்தார்.

அந்த இளைஞர் ஜனவரி 24, 26 ஆகிய இரு நாட்கள் உணவு உட்கொண்டதாக கிராம அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 28ஆம் தேதி மருத்துவர் ஒருவர் யான் செங்குக்கு சிகிச்சை அளித்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.

யான் செங்கின் தம்பி பிறந்த பிறகு அவர்களது தாயார் உயிரை மாய்த்துக்கொண்டதாக திரு யான் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார் என்றும் அவரது கணக்கு தற்போது நீக்கப்பட்டுவிட்டதாகவும் சவுத்சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

#பெருமூளைவாதம் #வூஹான் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்