இரு ஜப்பானியர்கள் சுகாதாரப் பரிசோதனை செய்ய மறுப்பு

இரு ஜப்பானியர்கள் சுகாதாரப் பரிசோதனை செய்ய மறுப்பு

2 mins read
344cf708-253c-4045-974f-45f9bf649b2e
ஜப்பானில் வூஹானிலிந்து வந்த பயணிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்கியோ: கொரோனா கிருமித் தொற்றுக்கு மையமாக விளங்கும் சீனாவின் வூஹான் நகரிலிருந்து ஜப்பானிய குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஜப்பானிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக நேற்று 206 ஜப்பானியர்கள் தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களுக்கு கொரோனா கிருமித் தொற்றியிருக்கிறதா என்று சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது.

ஆனால் இரு ஜப்பானியர்கள் சோதனைகளுக்கு உட்பட மறுத்து விட்டனர்.

இதனால் ஜப்பானில் புதிய அரசியல் சர்ச்சை கிளம்பியுள்ளது. நாட்டு நலன்களுக்கு எதிராக தனிப்பட்ட ஒருவரின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமா என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.

"இரு பயணிகளையும் சுகாதாரப் பரிசோதனைகளுக்குச் சம்மதிக்க வைக்க அதிகாரிகள் முடிந்த அளவு முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மீது சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க முடியாது," என்று பிரதமர் அபே குறிப்பிட்டார்.

சுகாதாரப் பரிசோதனைகளை செய்து கொள்ளாத இரு பயணிகளும் பின்னர் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வூஹானிலிருந்து அழைத்து வரப்பட்ட 206 பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அவர்களில் இருவர் காய்ச்சலும் இருமலும் இருப்பதாகக் கூறியதால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தோனீசியாவும் தங்களுடைய குடிமக்களை சீனாவிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது.

அப்படி வூஹானிலிருந்து திரும்பி வரும் அனைத்துப் பயணிகளும் குறைந்தது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

இந்தோனீசியர்களை அழைத்து வருவதற்காக பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது. வூஹானில் மட்டும் 243 இந்தோனீசியர்கள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

தென்கொரியாவும் சீனாவிலிருந்து 700 குடிமக்களை வெளியேற்ற ஆயத்தமாகி வருகிறது. நான்கு விமானங்களில் அவர்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் முதல் விமானம் நேற்று புறப்படுவதில் தாமதமானது.

இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இருந்தாலும் பின்னேரத்தில் விமானம் புறப்படும் என்று நேற்று தகவல்கள் தெரிவித்தன.