சுடச் சுடச் செய்திகள்

வூஹான் கடைத் தெருவில் இறந்து கிடந்த ஆடவர்; பரபரப்பில் அதிகாரிகள்

கொரோனா கிருமித் தொற்றின் மையம் என்று கூறப்படும் வூஹானில் முகக்கவசம் அணிந்தபடி ஆடவர் ஒருவர் கடை ஒன்றுக்கு வெளியில் இறந்து கிடந்தது அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக உள்ளது. அவரது கையில் கடையில் பொருட்கள் வாங்கிய பை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் தொழில்துறை நகரான வூஹான் தெருக்களில் பொதுவாக கூட்ட நெரிசல் அதிகம் காணப்படும். ஆனால், கிருமித் தொற்று காரணமாக தற்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன தெருக்கள். 

ஆடவர் இறந்து கிடந்த தெருவில் சென்ற ஒரு சிலர் கூட அவருக்கு அருகில் சென்று பார்க்கத் துணியவில்லை.

நேற்று (ஜனவரி 30) அந்த ஆடவர் இறந்து கிடந்ததை ஏஎஃப்பி செய்தியாளர்கள் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அங்கு வந்த அவசர சிகிச்சை வாகனத்திலிருந்து முழுப் பாதுகாப்பு உடைகளிலிருந்த போலிசாரும் மருத்துவ ஊழியர்களும் இறங்கினர்.

மூடப்பட்டிருந்த தளவாடக் கடை ஒன்றின் முன்பாக மல்லாந்து விழுந்துகிடந்த அந்த ஆடவரின் உடல் மீது நீல நிறப் போர்வை ஒன்றைப் போர்த்தினர் மருத்துவ ஊழியர்கள்.

அதனைத் தொடர்ந்து அந்த அவசர வாகனம் அங்கிருந்து அகன்றது. உடனே, பேரங்காடியின் அட்டைப் பெட்டிகளைக் கொண்டு அந்த இடத்தை போலிஸ் அதிகாரிகள் மறைக்க முற்பட்டனர்.

60களில் இருந்த அந்த ஆடவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை என்று ஏஎஃப்பி தெரிவித்தது. 

அந்த ஆடவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு பெண்மணி, கிருமித் தொற்று காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றார்.

“கொடுமை,” என்று குறிப்பிட்ட அந்தப் பெண், “அண்மையில் பலர் இறந்து விட்டனர்,” என்றார். 

கொரோனா கிருமித் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கக்கூடிய முக்கிய மருத்துவ நிலையங்களில் ஒன்றான 'வூஹான் நம்பர் 6' மருத்துவமனைக்கு அருகில்தான் அந்த ஆடவர் இறந்து கிடந்ததாகக் கூறப்பட்டது.

அந்த ஆடவரைப் பரிசோதித்த தடயவியல் நிபுணர்கள் மீது அவர்களது சகாக்கள் உடனடியாக கிருமிநாசினியைத் தெளித்ததாகக் கூறப்பட்டது. 

அந்தப் பகுதியில் புகைபிடித்துக்கொண்டிருந்த ஆடவரை உடனடியாக முகக்கவசம் அணிந்துகொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அந்தச் சம்பவத்தை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு ஏஎஃப்பி செய்தியாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்குள்ளாக கிட்டத்தட்ட 15 அவசர சிகிச்சை வாகனங்கள் அந்தப் பக்கமாக சென்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

சற்று நேரத்தில் அங்கு வந்த வெள்ளை நிற வேன் ஒன்றில், மஞ்சள் வண்ண பைக்குள் வைக்கப்பட்ட அந்த ஆடவரின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

உடனே, அந்தப் பகுதியை ஊழியர்கள் சுத்தம் செய்து, கிருமிநாசினியைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வூஹானில் உள்ள மருத்துவமனைகளில் நீண்ட வரிசைகளில் நோயாளிகள் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஏஎஃப்பி செய்தியாளர்கள், சிலர் இரண்டு நாட்களுக்கு மேலாகக் காத்திருப்பதாகக் கூறினர்.

#தமிழ்முரசு #வூஹான் #கடைத்தெருவில்இறந்துகிடந்தஆடவர்

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon