லண்டன்: பிரிட்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு 'கொரோனா' கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யார்க்கில் குடியிருக்கும் அவர்களுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதால் அன்று இரவே அவர்கள் நியூகாசலில் உள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டனர் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
தேசிய சுகாதார நிலையங்கள் முன்னேற்பாடுகளுடன் இருந்து வருகின்றன. கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை அடையாளம் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க முழு வேகத்துடன் சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்று பேராசிரியர் கிறிஸ் விட்டி தெரிவித்தார்.
புதிய விசித்திர கிருமிக்கு இதுவரை சீனாவில் 213 பேர் இறந்துவிட்டனர். மேலும் சீனா முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 18 நாடுகளில் 98 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

