மாணவர்களை மீட்கமாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு

மாணவர்களை மீட்கமாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு

1 mins read

இஸ்லாமாபாத்: கொரோனா கிருமித்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஹுபெய் மாநிலத்தில் இருக்கும் தங்கள் குடிமக்களை மீட்டு, திரும்ப அழைத்து வர பல நாடுகளும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இவ்வேளையில், பாகிஸ்தான் மட்டும் 'அத்தகைய நடவடிக்கையில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்' எனக் கூறி, வியப்பளித்துள்ளது.

பாகிஸ்தானியர்கள் கிட்டத்தட்ட 500 பேர் வூஹானில் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், "சீனாவில் இருக்கும் எங்களின் அன்புக்குரியவர்கள் அங்கேயே இருப்பதுதான் நல்லது என நாங்கள் நம்புகிறோம். எங்கள் நாட்டின், இந்த வட்டாரத்தின், இந்த உலகத்தின் நலன் கருதி அவர்களை சீனாவைவிட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கமாட்டோம்," என்று தேசிய சுகாதாரச் சேவைகளுக்கான பிரதமரின் சிறப்பு உதவியாளர் டாக்டர் ஸாஃபர் மிர்சா கூறியிருக்கிறார்.

"இதைத்தான் உலக சுகாதார நிறுவனமும் சொல்கிறது. இதுதான் சீனாவின் கொள்கை. இதுவே எங்களது கொள்கையும்கூட. ஒற்றுமையுடன் சீனாவிற்குத் தோள்கொடுக்கிறோம். இப்போதைக்கு, வூஹான் நகரிலேயே கொரோனா கிருமித்தொற்றை சீனா கட்டுப்படுத்தி வருகிறது. பொறுப்பில்லாமல் நடந்துகொண்டு, அங்குள்ள எங்கள் நாட்டினரை மீட்கத் தொடங்கினால் அந்தக் கிருமித்தொற்று காட்டுத்தீ போல உலகம் முழுக்கப் பரவிவிடும்," என்றார் அவர்.

இதே காரணத்திற்காகத்தான் சீனாவும் தன் நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களை அங்கிருந்து வெளியேற அனுமதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்கள், தாங்கள் உடனே நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஊடகங்கள் வழியாக கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.