வூஹான் கொரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவுவதை அடுத்து பல்வேறு நாடுகளும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் சீனாவிற்கான விமான சேவைகளை நிறுத்தி வருகின்றன.
சீனாவிற்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப் படுகின்றன என்று வியட்னாம், உஸ்பெகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவிலிருந்து சீனாவிற்கான இரண்டு நேரடி விமான சேவைகளை இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து இடைக் காலமாக நிறுத்தவிருப்பதாக கான்டாஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. சிட்னியில் இருந்து பெய்ஜிங்கிற்கும் சிட்னியிலிருந்து ஷங்ஹாய்க்கும் செல்லும் அந்த விமான சேவைகள் அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என கான்டாஸ் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அதேபோல, பிலிப்பீன்சின் செபு பசிபிக் விமான சேவை நிறுவனம், இன்று முதல் மார்ச் 29ஆம் தேதி வரை சீனா, மக்காவ், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்து உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்கன், டெல்டா, யுனைடெட் ஆகிய விமான நிறுவனங்களும் சீனாவிற்கான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளன.

