அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் உறவைத் துண்டித்தது பாலஸ்தீனம்

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் உறவைத் துண்டித்தது பாலஸ்தீனம்

2 mins read
970b4d93-52b3-46c8-8a2d-afceb32af040
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த சமாதான திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள். படம்: ஏஎஃப்பி -

கெய்ரோ: அமெரிக்காவின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்தை நிராகரித்த பாலஸ்தீனம், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் குறிப்பாக, இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் சமாதான திட்டம் ஒன்றை அறிவித்தார்.

இந்த திட்டத்தின்படி, வெஸ்ட் பேங்க் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீன மக்களின் எல்லைப்பகுதிக்கான தன்னாட்சி அதிகாரம் குறைக்கப்படும், அல்லது பறிக்கப்படும்.

மேலும், இஸ்ரேல் அரசால் ஜெருசலம் நகரின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டு எல்லையுடன் இணைக்கப்படும்.

இதற்குப் பதிலாக, பாலஸ்தீன நாட்டின் பூர்வீக குடிமக்களான ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா முனைக்கு தனிநாடு என்ற அந்தஸ்து அளிக்கப்படும் என்பது அத்திட்டத்தின் ஒருபகுதியாகும்.

அமெரிக்காவின் இந்த சமாதான திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாலஸ்தீன அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அரேபிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களின் உயர்மட்ட அவசர கூட்டத்துக்கு பாலஸ்தீன அரசு ஏற்பாடு செய்தது.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய பாலஸ்தீன அதிபர் மஹ்மட் அப்பாஸ், "இஸ்ரேல், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த தொடர்பும் இனி இருக்காது என்று நாங்கள் கூறிவிட்டோம்.

"சமாதான திட்டம் தொடர்பாக எங்களுடன் ஆலோசனை நடத்தினேன் என்று கூறும் வாய்ப்பாக இதை டிரம்ப் பயன்படுத்திக் கொள்வார் என்பதால் அவரது அழைப்புகளுக்கு நான் பதில் அளிக்கவில்லை," என்றார்.

பாலஸ்தீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் போலிஸ் பகுதிகளில் இஸ்ரேல், பாலஸ்தீன பாதுகாப்புப் படைகள் நீண்டகாலமாக ஒத்துழைத்து வந்தன.

இதுதவிர சிஐஏவுடன் உளவுத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையும் பாலஸ்தீனம் கொண்டிருந்தது.