கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுதேஷ்; மின்னல் வேகத்தில் சுட்ட போலிஸ்

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுதேஷ்; மின்னல் வேகத்தில் சுட்ட போலிஸ்

2 mins read
21e3cb85-0fb7-4dac-9ef2-c75fbd57a376
ஏற்கெனவே பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதற்காக 2018 டிசம்பரில் மூவாண்டு, நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற சுதேஷ் அம்மான், பிணையில் வெளிவந்தபோது இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார். படம்: இணையம் -
multi-img1 of 2

தெற்கு லண்டனில் பொதுமக்களை கண்மூடித்தனமாகக் கத்தியால் குத்திய இளையரை போலிசார் சுட்டுக்கொன்றனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்ட்ரீத்தம் விரைவுச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தில் மூவர் காயமுற்றனர்.

அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவரின் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது.

சுதேஷ் அம்மான், 20, என்பது அவரது பெயர் என்றும் ஏற்கெனவே பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதற்காக 2018 டிசம்பரில் மூவாண்டு, நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற அவர், ஒரு வாரத்திற்கு முன்னால் பிணையில் விடுவிக்கப்பட்டதையும் போலிசார் தெரிவித்தனர்.

பிணையில் இருந்தபோது போலிஸ் கண்காணிப்பில் இருந்ததால் கத்திக்குத்து தாக்குதலை நடத்திய உடனேயே அந்த நபரை போலிசார் சுட்டு வீழ்த்தினர்.

அவர் வசித்த இடம் குறித்த விவரங்களைத் திரட்ட தெற்கு லண்டன், பிஷப்'ஸ் ஸ்டார்ட்ஃபர்ட், ஹெர்ட்ஃபோர்ஷையர் ஆகிய இடங்களில் போலிசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, பயங்கரவாதக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவர் இவ்வளவு சீக்கிரம் பிணையில் விடுவிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்திருப்பதாக ஸ்ட்ரீத்தம் நாடாளுமன்ற உறப்பினர் பெல் ரிபெய்ரோ-எட்டி கூறினார்.

ஆனால், போலிசார் மிகச்சரியாகச் செயல்பட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாத்ததாக நிதி அமைச்சர் ரிஷி சுனாக் கூறினார்.

கடந்த நவம்பர் மாதம் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் பயங்கரவாதச் சட்டத்தைக் கடுமையாக்கும் புதிய நடவடிக்கைகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளதாகவும் போலிசுக்கு அதிக அதிகாரம் தரப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரிட்டன் தலைநகரில் மூன்று மாதங்களில் நடைபெற்ற இரண்டாவது கத்தி தாக்குதல் சம்பவம் இது. நவம்பர் மாதம் லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட உஸ்மான் கானும் பயங்கரவாதக் குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#லண்டன்தாக்குதல் #சுதேஷ்அம்மான் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்