பெய்ஜிங்: 2019 நோவல் கொரோனா கிருமி காரணமாக சீனப் பங்குச்சந்தைகள் நேற்று ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டன. கிட்டத்தட்ட 3,500 பங்குகளின் விலைகள் 10 விழுக்காடு இறங்கின. ஷாங்காய் பங்குச்சந்தை 7.7 விழுக்காடு குறைந்தது. இந்த அளவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்குச்சந்தை இறக்கம் கண்டதில்லை.
அந்தச் சந்தையில் நேற்று ஏறக்குறைய US$420 பில்லியன் (SS573 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுவிட்டது. அதேவேளையில், சீனாவின் ஆகப் பெரிய இரண்டாவது பங்குச்சந்தையான ஷென்ஸென் சந்தை 8.4 விழுக்காடு இறக்கம் கண்டது.
நோவல் கொரோனா கிருமி காரணமாக சீனப் பொருளியலில் பெரிய அளவுக்குப் பாதக விளைவுகள் ஏற்பட்டு வருவதையே இந்த நிலவரம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. சீனப் பங்குச்சந்தைகள் 2015க்குப் பிறகு மிகப் பெரிய அளவில் இப்போதுதான் இறங்கி இருக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்கு வர்த்தகம் ஏறக்குறைய மிகவும் சிரமமாகிவிட்டது என்றும் இப்போது கிருமி தாக்குதல் காரணமாக எந்த அளவுக்கு விளைவுகள் இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே, சீனாவின் யுவான் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு குறைந்து ஒரு டாலருக்கு 7 யுவான் அளவை நேற்று எட்டியது.
நாணயம் இப்படி குறைந்ததை அடுத்து சீனாவின் மத்திய வங்கி தலையிட்டு யுவான் மதிப்பை ஒரு டாலருக்கு 6.9249 யுவான் என்று நிலைப்படுத்தியது.

