வாஷிங்டன்: அமெரிக்காவில் நோவல் கொரோனா கிருமி அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் கலிபோர்னியா மாநில சுகாதார அதிகாரிகள் 11வது கிருமித் தொற்றுச் சம்பவத்தை உறுதி செய்துள்ளனர்.
சான்டா கிளாராவில் ஒருவரும் சான் பெனிட்டோவில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
சாண்டா கிளாராவில் கிருமித் தொற்றியவரிடம் நெருக்கமாக இருந்த ஒரு பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிருமி தொற்றியவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல் ஏற்படவில்லை.அவர், நோவல் கிருமி உருவான வூஹான் நகருக்குச் சென்று திரும்பியவர். சாண்டா கிளாராவில் பாதிக்கப்பட்ட 2வது நபர் இவர்.
முதல் தொற்றுச் சம்பவத்துடன் இவருக்குத் தொடர்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சான் பெனிட்ேடாவில் கிருமித் தொற்றுக்கு ஆளான இருவரும் தம்பதியர்.
இவர்களும் இதுவரை மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கொரோனா கிருமித் தொற்றுவதிலிருந்து அமெரிக்கர்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் சீனாவுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றார் அவர்.

