நியூயார்க்: சீனாவில் இருந்து பரவும் 2019 நோவல் கொரோனா கிருமி உலகையே வட்டமிடும் அளவுக்கு உலகளாவிய தொற்றுநோயாகப் பெருகும் வாய்ப்பு இருக்கிறது என்று உலகின் முன்னணி தொற்றுநோய்த் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சீனாவும் அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளும் அசாதரணமான அளவுக்குப் பயணக் கட்டுப்பாடு களையும் தடுத்துவைப்பு கண்காணிப்புகளையும் நடப்புக்குக் கொண்டுவந்துள்ள போதிலும், இப்போது ஒன்று அல்லது இரண்டு கண்டங்களில் பரவி உள்ள அந்தக் கிருமிகள் உலகம் முழுவதையும் தொற்றி விடக்கூடும் என்று அவர்கள் கருத்து கூறுகின்றனர்.
என்றாலும் நோவல் கொரோனா கிருமி எந்த அளவுக்குக் உயிர்பலி கிருமிகளாக இருக்கும் என்பது தெரியவில்லை.
ஆகையால் உலகளவில் அவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் எதுவரை இருக்கும் என்பதும் புரியவில்லை.
ஆனால் நோவல் கொரோனா கிருமி மனிதர்களுக்கு இடையில் படுவேகமாக விரைந்து பரவும் ஆபத்து இருக்கிறது என்று பரவலாக ஒப்புக்கொள்ளும் போக்கு கூடி வருகிறது.
நோவல் கொரோனா கிருமி, சார்ஸ், மெர்ஸ் ஆகிய கிருமிகளைவிட வேகமாக அதாவது சளிக்காய்ச்சல் போல் பரவுகின்றன.
இக்கிருமி மிக விரைவாக பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால் இது உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்கும் என்பது ஏறக்குறைய நிச்சயம் என்று அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்க் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஆண்டனி ஃபாஸி கூறுகிறார்.
ஆனால் பேரழிவுக் கிருமியாக அது இருக்குமா என்பது தெரியவில்லை. நோவல் கொரோனா கிருமி கடந்த மூன்று வாரங்களில் 23 நாடுகளில் 14,000 பேரைத் தொற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. சீனாவில் மரணம், 300ஐ தாண்டிவிட்டது. பிலிப்பீன்சிலும் ஒருவர் மாண்டு இருக்கிறார்.
நிலைமை இப்படி இருக்க, இந்தக் கிருமி உண்மையிலேயே 100,000 அல்லது அதற்கும் மேலான மக்களைப் பாதித்து இருக்கும் என்று பல்வேறு தொற்றுநோய்த் துறை ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.
முன்பு தலைவிரித்தாடிய சார்ஸ் கிருமிகள் தொற்றியவர்களில் சுமார் 10 விழுக்காட்டினர் மாண்டனர். மெர்ஸ் கிருமி தொற்றியவர்களில் மூன்றில் ஒருவர் இறந்தார்.
ஆனால் இப்போது கிளம்பி இருக்கும் கிருமி உலகளவில் எத்தனை பேரின் உயிரைக் குடிக்கும் என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.
நோவல் கொரோனா கிருமி தொற்றியவர்களில் மரண அளவு இதுவரையில் ஏறக்குறைய 2 விழுக்காடாகக் கட்டுப்பட்டு இருக்கிறது.
இந்தக் கிருமியைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற வாய்ப்பு குறைவதாகத் தெரிகிறது என்று டாக்டர் தாமஸ் ஃபிரிடன் என்பவர் கூறுகிறார்.
இவர் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் என்ற அமைப்பின் முன்னாள் இயக்குநர்.
ஆகையால் இப்போது தலையெடுத்து இருக்கும் கிருமி பரவும் என்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் எந்த அளவுக்கு அவை பரவும், எந்த அளவுக்கு மரணங்களை ஏற்படுத்தும் என்பவை இன்னமும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
நோவல் கொரோனா கிருமிகள் உலகத் தொற்றுநோயாக மாறினால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் சில நாடுகளில் கடுமையாக இருக்கும்.
தங்கள் நாட்டுக்குள் நுழையும் கிருமிகளைத் தொடக்கத்திலேயே தடுத்து தனிமைப்படுத்திவிடக்கூடிய ஆற்றல் அமெரிக்காவுக்கும் இதர பணக்கார நாடுகளுக்கும் இருக்கக்கூடும்.
ஆனால் சுகாதாரப் பராமரிப்பு சரியில்லாத நாடுகளைப் பொறுத்தவரையில் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அங்கு அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ள வல்லுநர்கள், நோவல் கொரோனா கிருமி கம்போடியா, இந்தியா, மலேசியா, நேப்பாளம், பிலிப்பீன்ஸ், கிராமப்புற ரஷ்யா ஆகிய நாடுகளை எட்டி இருப்பதைச் சுட்டியுள்ள னர்.

