கோலாலம்பூர்: முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தம் மீதான முறைகேட்டை நேற்று நீதிமன்றத்தில் அடியோடு மறுத்தார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 42 மில்லியன் ரிங்கிட் தொகையை தமது சொந்தக் கணக்கிற்கு மாற்ற உத்தரவிட்டதாகக் கூறப்படும் புகாரை சத்தியம் செய்து மறுத்தார் அவர்.
அதனைச் செய்ய யாருக்கும் எப்போதும் உத்தரவிட்டதில்லை என்பதை அரபு சொற்றொடர் மூலம் திரு நஜிப் உறுதி அளித்தார்.
முஸ்லிம்கள் தங்கள் மீது களங்கம் இல்லை என சத்தியமாக மறுக்கப் பயன்படுத்தும் சொற்றொடர் அது.
அவரிடம் நேற்று நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின்போது எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபைசால் ஆரிஃப் காமிலுக்கு உத்தரவிடவில்லை என்பதை விளக்குமாறு வழக்கறிஞர் கேட்டபோது திரு நஜிப் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினார்.
"அதுபோன்ற உத்தரவை நான் பிறப்பித்ததற்கான எந்தவோர் ஆதாரமுமில்லை. மேலும் அதனை நிரூபிக்க எந்தச் சாட்சியும் இல்லை," என்றார் அவர்.
அவர் இதுபோல் சத்தியம் செய்வது இரண்டாவது முறை.
கடந்த டிசம்பர் மாதம் அல்டன்டுயா ஷாரிபுவின் கொலை வழக்கில் தாம் சம்பந்தப்படவில்லை என்பதற்காக கம்போங் பாருவில் உள்ள ஜாமெக் பள்ளிவாசலில் அவர் சத்தியப் பிரமாணம் செய்து தம் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

