கொழும்பு: விமானங்களைக் கொள்முதல் செய்வதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கும் ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் இண்டஸ்ட்ரீஸுக்கும் இடையில் நடைபெற்ற பெரும் நிதி முறைகேடு குறித்து முழுமையாக விசாரணை நடத்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிதி முறைகேடு தொடர்பான செய்தி இலங்கையில் வெளியாகும் ஆங்கில சஞ்சிகையில் நேற்று முன்தினம் வெளியானது. இணையத்தளம் ஒன்றிலும் அது தொடர்பான தகவல் பதிவேற்றப்பட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவரின் மனைவியின் பெயரில் இயங்கும் நிறுவனம் ஒன்று ஏர்பஸ் நிறுவனத்திடம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2011 ஜூலை மாதத்துக்கும் 2015 ஜூன் மாதத்துக்கும் இடையில் ஏர்பஸ் நிறுவனத்துக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் பல்வேறு லஞ்ச ஊழல் விவகாரங்கள் அரங்கேறியதாகவும் அவை குறிப்பிட்டன. அந்தத் தகவல்களுக்கு ஆதாரமாக பிரிட்டனின் எஸ்எஃப்ஓ எனப்படும் கடும் மோசடிகளைக் கண்டறியும் அலுவலகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்திகளை அறிந்ததுமே முறைகேட்டில் ஈடுவட்டவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணையை உடனே தொடங்குமாறு அதிபர் உத்தரவிட்டதாக இலங்கை அதிபர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது.

