ஹாங்காங்கில் கொரோனா கிருமிக்கு முதல் நபர் பலி

ஹாங்காங்கில் கொரோனா கிருமிக்கு முதல் நபர் பலி

2 mins read
7d74b946-2ec8-4846-a7c2-8fb92273c923
கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் தசை வலி ஏற்பட்டு அவர் மருத்துவ உதவியை நாடினார். பின்னர் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். படம்: நியூயார்க் டைம்ஸ் -

ஹாங்காங்: ஹாங்காங்கில் முதல் முறையாக கொரோனா கிருமி தொற்றியவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர், சீனாவுக்கு வெளியே கொரோனா கிருமிக்கு பலியான இரண்டாவது நபர் ஆவார். சீனாவில் இதுவரை அந்த கிருமி தொற்றியவர்களில் 420 பேர் இறந்துவிட்டனர்.

இதனால் உலகம் முழுவதும் கொரோனா கிருமி அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

இது, உலகப் பொருளியல் வளர்ச்சியையும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் உள்ள வூஹான் நகருக்குச் சென்ற அந்த 39 வயது நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் ஜனவரி 23ஆம் தேதி அவர் ஹுனான் மாநிலத்தின் சங்ஷாவிலிருந்து ஹாங்காங் திரும்பியதாக ஹாங்காங் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சுகாதார பராமரிப்பு நிலையங்களுக்கோ, சந்தைகளுக்கோ, கடலுணவு விற்பனை நிலையங்களுக்கோ செல்லவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் தசை வலி ஏற்பட்டு அவர் மருத்துவ உதவியை நாடினார். பின்னர் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

வாம்போ கார்டனில் வசித்து வந்த அந்த நபர், ஹாங்காங்கில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 13வது நபர் ஆவார்.

அவரது 72 வயது தாயாருக்கும் கிருமி தொற்றியது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவுடனான எல்லா எல்லைகளையும் மூடவேண்டும் என்று ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் வேளையில் கொரோனா கிருமிக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.