கோலாலம்பூர்: விமானங்கள் வாங்குவது தொடர்பில் ஏர்பஸ் நிறுவனத்திடம் ஏர்ஏஷியா 50 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அதன் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டிஸ் தற்காலிகமாக பதவி விலகியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஏர்ஏஷியா விமான நிறுவனமும் ஊழல் தடுப்பு ஆணையமும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள நிலையில், டோனி பெர்னாண்டிசும்
தலைவர் கமாரூதின் மெரானுனாம் அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பதவியிலிருந்து விலகியிருப்பார்கள்.
ஆனால் தற்போதைய நிச்சயமற்ற சூழலைச் சமாளிக்க உதவும் வகையில் இவர்கள் ஆலோசகர்களாக நீடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்ஏஷியாவின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக அல்லாதவர்கள் அடங்கிய குழு குற்றச்சாட்டுகளை மறுஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

