அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான தகுதிநீக்கத் தீர்மானம் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் டிரம்ப் மீது ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சுமத்தினார்.
இதையடுத்து, அவரை அதிபர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதுகுறித்த தீர்மானமும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, டிரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள செனட் சபையில் தகுதிநீக்கத் தீர்மானம் முன்வைக்கப்பட்டு, நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பில், டிரம்ப் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு 52-48 எனவும் நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக விளங்கினார் என்ற குற்றச்சாட்டு 53-47 எனவும் தோற்கடிக்கப்பட்டன.
இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் மீண்டும் களம் காணவிருக்கிறார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அவரை எதிர்த்து நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஜோ பைடன் மீது ஊழல் விசாரணை நடத்துமாறு உக்ரேன் நாட்டிற்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாகவும் அதற்காக அவர் ராணுவ உதவிகளை நிறுத்தி வைத்ததாகவும் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது. ஆனாலும், தம் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என டிரம்ப் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இரு குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதை அடுத்து, "அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவரை வீழ்த்த முடியாது என்பது எதுவும் செய்ய இயலாத ஜனநாயகக் கட்சியினருக்குத் தெரியும். அதனால்தான் அதிபரைப் பதவிநீக்கம் செய்ய அவர்கள் முயன்றனர். இது அவர்களின் பிரசாரத் தந்திரம்," என்று டிரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

