ஊடகத்துக்கு சீன அரசாங்கம் கடிவாளம்

ஊடகத்துக்கு சீன அரசாங்கம் கடிவாளம்

2 mins read
3447d377-3140-47b7-8072-be3a00349a45
கொரோனா கிருமி பற்றிய அச்சமூட்டும் பொய்த் தகவல்களைப் பரப்புவதைக் கட்டுப்படுத்த சமூக ஊடகங்களின் மீதான தணிக்கைகளை சீனா மேலும் வலுப்படுத்தியுள்ளது. படம்: ராய்ட்டர் -

கொரோனா கிருமி சீனாவில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிலையில் செய்தி ஊடகம் மற்றும் இணையத்திற்கு சீன அரசாங்கம் கடிவாளம் போட்டு இருக்கிறது.

கொரோனா கிருமி நெருக்கடி பற்றி பாதகமான முறையில் வெளிவரும் தகவல்களைக் கட்டுப்படுத்த சீனா முயல்வதாகத் தெரிகிறது. சீனத் தலைவர்கள், ஒரு தலைமுறை காலத்தில் சந்திக்காத சவாலாக கொரோனா கிருமிகள் உருவெடுத்துள்ளன.

அந்தக் கிருமி பாதித்தவர்களில் 563 பேர் மாண்டுவிட்டார்கள் என்று நேற்று சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி, 28,018 பேரை கொரோனா கிருமிகள் தொற்றி இருக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அன்றாடம் ஆயிரக்

கணக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவருகின்றன. கிடுகிடுவென பரவும் கிருமிகளைத் தடுக்க போதிய அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற அச்சம் பல சீனர்களிடையே நிலவுகிறது. சீனா முழுவதுமே மக்களிடையே எரிச்சலும் சலிப்பும் கூடி இருக்கின்றன.

இந்த நிலையில், சீனத் தலைவர்கள் தகவல் கட்டுப்பாடுகளைப் பலப்படுத்துவதைப் போல தெரிகிறது.

வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பற்றிய ஆக்ககரமான தகவல்களில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தும்படி அண்மைய நாட்களில் அரசாங்க செய்தி, ஊடகங்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அறிவுரை கூறப்பட்டு இருப்பதாக சீனச் செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று பேர் கூறுகிறார்கள்.

இணையத்தளங்கள், கொரோனா கிருமிகளை ஒழிப்பதற்கு சீன அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பல தகவல்களை அகற்றி இருக்கின்றன. அவை இந்தக் கிருமி பற்றி பாதகமான செய்திகளை வெளியிடுவதையும் குறைத்துக் கொண்டு இருக்கின்றன. இத்தகைய முயற்சிகளை சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் பாராட்டி இருக்கிறது.

கொரோனா கிருமி தலைகாட்டியது முதல் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

பல விமான நிறுவனங்களும் சேவைகளை ரத்து செய்து இருக்கின்றன. பல பயணிகளுக்கும் பெரும் சங்கடம் ஏற்பட்டு இருக்கிறது. சீனாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் இந்தக் கிருமிகளும் அவற்றால் ஏற்படக்கூடிய மரணங்களும் மூத்த தலைவர்களுக்கு புதிய நெருக்குதல்களை ஏற்படுத்தி இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இதேநிலையில் நம்பிக்கை தரும் நிலவரமாக குணமடையும் மக்களின் எண்ணிக்கையும் சீனாவில் கூடி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.