அமெரிக்க பொருட்கள் மீதான வரியை பாதியாக குறைத்த சீனா

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை பாதியாக குறைத்த சீனா

2 mins read

பெய்ஜிங்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை பாதியாக குறைக்கவுள்ளதாக சீன நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அண்மைய வர்த்தக ஒப்பந்தத்தின் திருப்தியை வெளிப்படுத்தும் வகையில், பிப்ரவரி 14ஆம் தேதி சீனா இறக்குமதி செய்யும் 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 1,717 அமெரிக்கப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீண்ட நாளைய வர்த்தகப் போருக்குப் பிறகு அமெரிக்க-சீனா இடையே மூன்று வாரங்களுக்கு முன்னர் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சீனா வெளியிட்டுள்ள முதல் வரி குறைப்பு அறிவிப்பு இது.

மேலும் இது கொரோனா கிருமித் தொற்று பரவல் காரணமாக சீன வர்த்தகம் சீர்குலைந்துள்ளதால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கான சீனாவின் ஒரு நடவடிக்கையாகவும் இது ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சீன நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படுகிறது. 5 விழுக்காட்டு வரி பொருட்களுக்கு 2.5 விழுக்காடாகக் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் இன்னோர் அறிக்கையில், சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி குறைப்பு அறிவித்ததையடுத்து, வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

வருங்கால மாற்றங்கள் இருதரப்பு பொருளாதாரம், வர்த்தக நிலைமையின் வளர்ச்சியைப் பொறுத்தது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் மீதான வரி ஐந்திலிருந்து 2.5 விழுக்காடாக குறையும்.

"இது போன்ற வரி குறைப்பு என்பது ஒரு பரஸ்பர நடவடிக்கை, வர்த்தக போர் காலம் முழுவதும் சீன அரசாங்கம் கடைப்பிடித்த ஒரு நிலையான நிலைப்பாடு," என்று ஏஎன்ஜி நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ரேமண்ட் யியுங் கூறினார்.