கோலாலம்பூர்: தன் மனைவி ரோஸ்மா மன்சூர் மீதான லஞ்ச குற்றச்சாட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேறும்படி முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் (படம்) கேட்டுக்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரோஸ்மாவுக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சாட்சியாக நஜிப் அழைக்கப்படலாம் என்பதால் அவர் இந்த வழக்கு நடைபெறும் நீதிமன்ற அறையில் இருப்பதை ஆட்சேபிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் அகமட் அக்ரம் காரிப் தெரிவித்தார்.
ஆனால் கணவன்-மனைவி என்ற அடிப்படையில்தான் நஜிப்பின் நீதிமன்ற வருகை அமைந்திருக்கிறது என்று அரசு தரப்பின் ஆட்சேபத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ரோஸ்மாவின் வழக்கறிஞர் குழு கூறியது.
எனினும் நீதிபதி முகமட் ஜைனி உடனடியாக நஜிப் வெளியேறுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கிடையே, குறிப்பிட்ட நிறுவன நிர்வாக இயக்குநரின் கார் ஓட்டுநர் இவ்வழக்கின் நான்காவது சாட்சியுமான சாம்சுல் என்பவர் ரோஸ்மாவின் வீட்டிற்கு இரண்டு பை நிறைய பணத்தை எடுத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

