'அரேபிய அல்-கொய்தா தலைவர் சுட்டுக்கொலை'

'அரேபிய அல்-கொய்தா தலைவர் சுட்டுக்கொலை'

2 mins read
5bf7ad28-f9ab-488f-953f-24cc7eb31fec
அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட காசிம் அல் ரேமி. படம்: இணையம் -

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவப் படையினர் ஏமனில் நடத்திய வான்வழித் தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவுக்குத் தலைமை தாங்கிய காசிம் அல் ரேமி கொல்லப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தி தெரிவிக்கிறது. இதனை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்கக் கடற்படை தளத்தில் கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு அரேபிய தீபகற்பத்தின் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அமெரிக்கா இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

காசிம் அல் ரேமி, ஏமனில் உள்ள அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும், அமெரிக்கா, அமெரிக்கப் படைகள் மீது பல தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"ரேமியின் கீழ், அல்-கொய்தா அமைப்பு ஏமனில் பொதுமக்களுக்கு எதிராக கடும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டன. அமெரிக்காவிற்கும் எங்கள் படைகளுக்கும் எதிராக ஏராளமான தாக்குதல்களை நடத்தவும் இந்த அரேபிய அல்-கொய்தா அமைப்பு திட்டமிட்டது.

"ரேமியின் மரணம் அரேபிய அல்-கொய்தா இயக்கத்தை மட்டுமல்லாமல் உலகளாவிய அல்-கொய்தா இயக்கத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை விளைவிக்கும் பயங்கரவாத இயக்கங்களைக் களைவதற்கு ஏதுவாக அமையும்," என்று டிரம்ப் கூறினார்.

இந்த தாக்குதல் எப்போது நடைபெற்றது, எந்த சூழலில் நடைபெற்றது என்பது பற்றி எந்த தகவலையும் டிரம்ப் கூறவில்லை.

அமெரிக்காவில் ராணுவப் பயிற்சிக்காகச் சென்றிருந்த சவூதி அதிகாரி ஒருவர் மூன்று பேரை சுட்டுக் கொன்ற அச்சம்பவத்திற்குப் பிறகு சில சவூதி வீரர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.