சிங்கப்பூருக்கு சென்று திரும்பியவருடன் தொடர்பில் இருந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஐவருக்கு கிருமித் தொற்று

1 mins read
9c7f3b9e-278a-4660-8669-c6e65cb00579
வூஹான் மருத்துவமனையில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

பிரான்சில் பிரிட்டனைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு குழந்தையும் இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் ஏக்னஸ் புஸின் நேற்று (பிப்ரவரி 8) தெரிவித்தார்.

பிரான்சில் உள்ள ski chalet எனும் இடத்தில் தங்கியிருந்த அவர்களுக்கு, சிங்கப்பூரிலிருந்து அங்கு சென்ற ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு இந்த கிருமித் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த ஐவரையும் சேர்த்து, பிரான்சில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கிருமித் தொற்று ஏற்பட்ட ஐவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 20 முதல் 23ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் நாட்டவர் 24ஆம் தேதி பிரான்சுக்குச் சென்றார். அவருக்கு கிருமித் தொற்று இருந்தது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அந்த தங்குமிடத்தில் உள்ள இரண்டு வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கு சென்று வந்த, கிருமித் தொற்றுகண்ட அந்த பிரிட்டிஷ் ஆடவருடன் நெருக்கமாக இருந்த மற்றவர்களைப் பற்றிய விவரம் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #கொரோனா #பிரிட்டிஷ் #பிரான்ஸ் #சிங்கப்பூர்