விமானச் சேவை ரத்து காரணமாக தவிக்கும் சீனப் பயணிகளுக்கு மலேசியாவில் தங்க சிறப்பு அனுமதிச் சீட்டு

விமானச் சேவை ரத்து காரணமாக தவிக்கும் சீனப் பயணிகளுக்கு மலேசியாவில் தங்க சிறப்பு அனுமதிச் சீட்டு

2 mins read

கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக சீனாவுக்கான விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மலேசியாவுக்குச் சென்ற சீனப் பயணிகள் தாயகம் திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.

அவர்கள் மலேசியாவில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்கும்பொருட்டு அவர்களுக்கு சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என மலேசியாவின் குடிநுழைவு நிர்வாக இயக்குநர் கைருல் ஸைமீ டாவுட் நேற்று கூறினார்.

கொரோனா கிருமித்தொற்றுடன் தொடர்பில்லாத, உடல்நலக் குறைவு உள்ள சீன நாட்டவருக்கும் இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றும் மலேசியாவில் உள்ள சீனத் தூதரகம் சரிபார்த்த பிறகு அது வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், மலேசியாவில் இருக்கும் சீன சுற்றுப்பயணிகள் அனைவருக்கும் விசா நீட்டிக்கப்படும் என்பது பொருளன்று என்றும் சுகாதாரப் பிரச்சினை காரணமாக அல்லது விமானச் சேவை நிறுத்தப்பட்டதன் காரணமாக மலேசியாவில் தங்க வேண்டிய சூழலில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த நீட்டிப்பு என்றும் அவர் விளக்கினார்.

"சீனாவுக்குத் திரும்பிச் செல்வதற்காக அவர்கள் பதிவு செய்த விமானச் சீட்டுகள், சீனத் தூதரகத்திலிருந்து சரிபார்ப்பு உறுதி ஆகியவற்றுடன் இந்த சிறப்பு அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்," என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு கைருல் ஸைமீ கூறினார்.

தாயகம் திரும்புவதற்கான விமானச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியைப் பொறுத்து, 14 அல்லது 30 நாட்களுக்கு மலேசியாவில் தங்க இந்தச் சிறப்பு அனுமதிச் சீட்டு வகை செய்யும்.

இதற்கிடையே, மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர் சீனாவைச் சேர்ந்த 67 வயது நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் நால்வர் மலேசியர்கள்.