ஜெனிவா: உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதநோம் கேடிரியேசுஸ் தலைமையில் அனைத்துலகக் குழு ஒன்று கொரோனா கிருமித்தொற்று தொடர்பின் புலனாய்வை மேற்கொள்ள இன்றோ நாளையோ சீனாவுக்குப் புறப்படவுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு டெட்ரோஸ், இந்தக் குழுவில் அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாட்டு நிலையத்தின் நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.
"கடந்த நான்கு நாட்களாக இக்கிருமித்தொற்று மையம் கொண்டுள்ள ஹுபெய் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நிலைப்பட்டுள்ளது என்பது நல்ல செய்தி. அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைள் பலன் தருகின்றன. இருப்பினும், சந்தேகத்துக்குரிய சம்பவங்கள் இன்னும் நிறைய உள்ளன," என்றார் உலகச் சுகாதார அமைப்பின் உயர் அவசரநிலை நிபுணர் டாக்டர் மைக் ராயன்.
பிலிப்பீன்ஸ் நாட்டவர் 30 பேர் வெளியேற்றம்
மணிலா: வூஹான் நகரத்திலிருந்து பிலிப்பீன்ஸ் நாட்டவர் 30 பேர் நேற்று பத்திரமாக மணிலா வந்து சேர்ந்தனர் என்றும் அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
30 பேரும் அவர்களை அழைத்து வந்த பத்து பேர் கொண்ட அரசாங்கக் குழுவினரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, பேருந்து மூலம் நியூ கிளார்க் சிட்டியில் உள்ள விளையாட்டாளர் கிராமத்துக்கு 14 நாள் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் அமைச்சு கூறியது.
ஹுபெய் மாநிலத்தில் உள்ள சுமார் 300 பிலிப்பின்ஸ் நாட்டவர்களில் அனைவருமே நாடு திரும்ப விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சீனப் பயணிகள் கட்டுப்பாடு:மலேசியா விரிவுப்படுத்தியது
கோலாலம்பூர்: சீனாவின் ஹுபெய் மாநிலத்தை அடுத்து ஸெஜியாங், ஜியாங்சு ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளும் இனி மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
சீனாவில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள்
சென்னை:ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக அனுமதிக்கப்பட்ட, மருத்துவ கல்லுாரி மாணவி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கொரோனா கிருமி அறிகுறி இருந்ததாக, இம்மாதம் 4ம் தேதி, சீனாவைச் சேர்ந்த கோவி, 34, ஜோ ஜின், 26, சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா, 19, லாவண்யா, 24, ஆகிய நால்வரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், சீனா, யுவான் மாகாணத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில், லாவண்யா, சவுந்தர்யா ஆகியோர் மருத்துவம் படித்து வந்துள்ளனர்.கோவி, ஜோ ஜின் ஆகியோர், தொழில்முறை பயணமாக சென்னை வந்துள்ளனர். நால்வரும் கொரோனா கிருமி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கோவி, ஜோ ஜின் ஆகியோருக்கு கொரோனா கிருமித் தொற்று இல்லை என மருத்துவச்சோதனை முடிவுகள் வந்ததையடுத்து, இருவரும், 8ம் தேதி, வீடு திரும்பினர். தொடர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவக் கல்லுாரி மாணவியருக்கும் மருத்துவச்சோதனையில் கொரோனா கிருமித் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.அதன்படி, சௌந்தர்யா நேற்று விடுவிக்கப்பட்டார். லாவண்யா விரைவில் விடுவிக்கப்படுவார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

