பேங்காக்: தாய்லாந்தின் கடைத் தொகுதிக்குள் புகுந்து 26 பேரைச் சுட்டுக் கொன்ற ராணுவ வீரரை 17 மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் நேற்று காலை சுட்டுக் கொன்றனர்.
இதுதொடர்பாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா வெளியிட்டுள்ள அறிக்கையில், 32 வயது ராணுவ வீரரான ஜக்ரபந்த் தொம்மா, நில ஒப்பந்தம் தொடர்பாக தன்னுடைய சக வீரரின் உறவினர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதாக நினைத்து, அந்த ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, சம்பவம் நடந்த நஹோன் ரட்சசிமா பகுதிக்குச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
"தாய்லாந்தில் இம்மாதிரியான சம்பவம் இதற்கு முன்னர் நடந்ததில்லை. இதுபோன்று நடப்பது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று அவர் சொன்னார்.
துப்பாக்கிச் சூட்டிற்கு முன்னதாக ராணுவத்தின் ஆயுத படைப்பிரிவு முகாமுக்குச் சென்று வாகனத்தில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார் தொம்மா.
அப்போது தன்னை ஏமாற்றியவரை அறிமுகப்படுத்திய ராணுவ அதிகாரியையும் சுட்டுக் கொன்றார் தொம்மா.
பிறகு அங்கிருந்து வெளியேறி 'டெர்மினல் 21' என்ற கடைத் தொகுதிக்குச் சென்று அங்குக் கண்ணில் தென்பட்டவர்கள் அனைவரையும் சுட்டுத் தள்ளினார்.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் பகல் மூன்று மணிக்கு அவன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடத் தொடங்கியதாகச் செய்திகள் கூறுகின்றன. தகவலறிந்து சென்று 'டெர்மினல் 21' கடைத் தொகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்து கிடந்தோரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் தொம்மா தொடர்ந்து வெளியிட்டு வந்தார். யாரும் மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை அவர் வெளியிட்டார்.
உடனடியாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிய அதிகாரிகள், பின்னர் வணிக வளாகத்துக்குள் புகுந்து தொம்மாவைத் தேட ஆரம்பித்தனர்.
சுமார் 17 மணி நேரத்திற்கு விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று காலை பாதுகாப்புப் படையினர் தொம்மாவைச் சுட்டுக் கொன்றனர்.
தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மாண்டதாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த அதிகாரிகள், இச்சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் குறைந்தது 52 பேர் காயமடைந்ததாகவும் சொன்னார்கள்.

