பிரதமருக்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்: மகாதீர்

பிரதமருக்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்: மகாதீர்

2 mins read
e86ed376-3c8c-448b-9ff2-e32299dea38a
தலைமைத்துவ மாற்றம்  குறித்து தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது  உறுதி, என்றாலும் பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது. படம்: ராய்ட்டர்ஸ் -

பெட்டாலிங் ஜெயா: தலைமைத்துவ மாற்றம் குறித்து தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது உறுதி, என்றாலும் பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது.

"வாக்குறுதி கொடுத்துள்ளோம். ஒருவேளை நான் வாக்குறுதியை மீற விரும்பினாலும், நாடாளுமன்றத்தில் எனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து பிரதமராக நீடிக்க முடியும்.

"ஆனால் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை நிராகரித்துவிட்டால், நான் பிரதமராக இருக்கமுடியாது, அதுதான் ஜனநாயகம். முடிவெடுப்பதற்கான அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உள்ளது," என்று மலாயா போஸ்ட் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னார்.

பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதற்குப் பதிலாக மகாதீரே முழு தவணைக்கும் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று பாஸ், அம்னோ கட்சிகள் பகிரங்கமாகக் கூறியது பற்றி, பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு மகாதீர் இவ்வாறு பதிலளித்தார்.

மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற இடங்களில் பெரும்பான்மையைப் பெற 111 இடங்களே ஒரு பிரதமர் வேட்பாளருக்குத் தேவை.

ஆனால், பிகேஆர் கட்சியின் 47 உறுப்பினர்களின் ஆதரவையும் அன்வாரால் பெற முடியுமா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது.

அஸ்மின் அலி, சுரைடா கமாருடின் என்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாருக்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் மகாதீர் பிரதமராகத் தொடர ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் முழுத் தவணைக்கும் பிரதமராகத் தொடர்வீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 'எனக்குத் தெரியவில்லை' என மகாதீர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.