மெல்பர்ன்: மேற்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கடுமையான காட்டுத் தீ பரவிய நிலையில் கிழக்கு கரையோர மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் யூக்லா மாவட்டத்தில் பகல் நேர வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
அதே வேளையில், டேமியன் புயல், வடமேற்கு ஆஸ்திரேலியாவின் வளங்கள் நிறைந்த பில்பாரா வட்டாரத்தைத் தாக்கியது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியால் மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் கூரைகள் காற்றில் பறந்தன.
டாம்பியர் மற்றும் கர்ரதா நகரங்களைச் சுற்றி மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் வீடுகளுக்கோ, வர்த்தக கட்டடங்களுக்கோ கடுமையான சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இதுதொடர்பாக விடுக்கப்பட்ட சிவப்பு அவசர எச்சரிக்கையால், மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தனர்.
கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சில இடங்களை வெள்ளம் சூழ்வதற்கான அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டேமியன் புயல், 'மிகவும் அழிவுகரமான காற்று', 'மிக அதிக மழை' ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளதாகவும், இதனால் மிகவும் ஆபத்தான புயல் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

