புதிய வரைபடத்தைத் தயார் செய்யும் பணியில் இஸ்ரேல்

புதிய வரைபடத்தைத் தயார் செய்யும் பணியில் இஸ்ரேல்

1 mins read

ஜெருசலம்: அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் முன்மொழிந்த சமாதானத் திட்டத்தின்படி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நில வரைபடங்களை இஸ்ரேல் உருவாக்கத் தொடங்கியுள்ளதாகப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.

"டிரம்ப் திட்டத்தின்படி, குறிப்பிட்ட பகுதியை இஸ்ரேலுடன் இணைத்து வரைபடமாக்கும் பணியில் ஏற்கெனவே நாங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். அதற்கு வெகு நாட்கள் எடுக்காது," என்று மாலேவில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் நெட்டன்யாஹு கூறினார்.

மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள், ஜோர்டான் பள்ளத்தாக்கு ஆகியவையும் இதில் அடங்கும்.

ஆனால், போரில் கைப்பற்றப்பட்ட பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அனுமதிக்கப்படுவது அனைத்துலக சட்டத்தை மீறுவதாக பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன.

ஆனால் இதுபோன்ற ஆட்சேபனைகளைத் திரும்பப் பெறும் வகையில் அமெரிக்க கொள்கையை அதன் அதிபர் டிரம்ப் மாற்றியுள்ளார்.

"பாலஸ்தீனத்தின் வரைபடமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வரைபடம் 1967ஆம் ஆண்டு ஜெருசலமுடன் அதன் தலைநகராக உள்ள பாலஸ்தீன அரசின் வரைபடம்தான்," என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அடுத்த மாதம் 2ஆம் தேதி இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரைபட மாற்றங்கள் செய்யப்படுகின்றன.