காபூல்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் தன்னுடைய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமையன்று நன்கர்ஹார் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தற்போதைய தகவல்களின்படி ஆப்கானிஸ்தான் சீருடையில் இருந்த ஒருவன் அமெரிக்க, ஆப்கானிஸ்தான் கூட்டுப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.
"துப்பாக்கிச் சூடு நடத்தியவன் பற்றியும் அதற்கான காரணம் குறித்தும் நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார் ராணுவ அதிகாரி சோனி லெக்கெட்.
2001, செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து தலிபான்களைக் களைவதற்கான அமெரிக்காவின் தலையீட்டிற்குப் பிறகு, சுமார் 13,000 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.

