கொரோனா கிருமித்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் ஹுபெய் மாநிலம், வூஹான் நகரில் வரும் வாரங்களில் அக்கிருமித்தொற்றுப் பரவல் உச்சத்தை எட்டும்போது 500,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை 910 பேர் இறந்து விட்டனர்.
இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 97 பேர் சீனாவில் மாண்டனர். அதில் 91 மரணங்கள் ஹுபெயில் நிகழ்ந்தன. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 40,000ஐத் தாண்டிவிட்டது.
"இப்போதைய போக்கைப் பார்க்கும்போது, இம்மாத மத்தியில் இருந்து மாத இறுதிக்குள் வூஹானில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் உச்சத்தை எட்டலாம் எனக் கணித்துள்ளோம்," எனக் கூறினார் லண்டன் சுகாதார, வெப்பமண்டல மருத்துவப் பள்ளியின் நோய்த்தொற்றியல் துறை இணைப் பேராசிரியர் ஆடம் குச்சர்ஸ்கி.
இப்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது 5 விழுக்காட்டினர், அதாவது கிருமித்தொற்று உச்சத்தை எட்டும்போது வூஹான்வாசிகளில் இருபது பேரில் ஒருவரை அது பாதித்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதத்தை ஹுபெய் மாநில அரசாங்கம் முதன்முதலாக வெளியிட்டுள்ளது. அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள வூஹான் நகரில் கிருமித்தொற்று பாதித்த நூறு பேரில் 4.06 பேர் என்ற விகிதத்திலும் அந்நகருக்கு அருகிலுள்ள டியான்மென் நகரில் நூற்றுக்கு 5.08 பேர் என்ற அளவிலும் உயிரிழப்பு இருப்பதாக 'கெய்ஸின் குளோபல்' செய்தி கூறுகிறது.

