ஜப்பான் கப்பலில் மேலும் 60 பேருக்குக் கிருமித்தொற்று
தோக்கியோ: ஜப்பானின் யோக்காஹாமா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டைமண்ட் பிரன்சஸ் சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளில் மேலும் 60 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக ஜப்பானின் டிபிஎஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து அந்தக் கப்பலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 130க்கு உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் மேலும் ஒருவருக்குப் பாதிப்பு
மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் மேலும் ஒரு மலேசியக் குடிமகன் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. அந்த 31 வயது ஆடவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மலேசியாவுக்குத் திரும்பினார் என்று மலேசிய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் அத்துறையின் இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அந்த ஆடவருக்கு சிலாங்கூரின் பந்திங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மலேசியாவில் இதுவரையிலும் 18 பேருக்கு கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், மற்ற ஆறுபேரும் மலேசியர்கள் என்று கூறப்படுகிறது.
தமிழக சுகாதார அமைச்சு: கொரோனா வதந்தி பரப்பாதீர்கள்
தமிழக அரசு தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவை ஒட்டிய எல்லையோர மாவட்டங்களில் தொடர் மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது. சீனாவில் இருந்து தமிழகம் வந்த 1854 பேர் வீட்டிலேயே தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அறிகுறி தென்பட்ட 42 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பில்லை என முடிவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. எனவே சமூக வலைதளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தியை பரப்ப வேண்டாம். பொதுமக்கள்அடிக்கடி கைகளையும் முகங்களையும் கழுவுவதன் வாயிலாக கொரோனா போன்ற கிருமித் தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று தமிழ் நாடு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பெய்ஜிங்: கிருமித்தொற்று அபாயத்தைக் கண்காணிக்கும் புதிய செயலி
பெய்ஜிங்: தங்களுக்கு கொரோனா கிருமி தொற்றக்கூடிய அபாயம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் புதிய செயலியை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட 'குளோஸ் கான்டெக்ட் டிடெக்டர்' எனும் அந்தச் செயலி க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து விசாரிப்புகளை மேற்கொள்ளலாம். இந்தச் செயலிக்கு சீன அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்துள்ளது.
பிரிட்டனில் 8 பேருக்குப் பாதிப்பு
பிரிட்டனில் கொரோனா கிருமித் தொற்றுக்கு நான்கு பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அது இப்போது இரட்டிப்பாக 8 பேர் ஆனது. இந்தக் கிருமித் தொற்று நாட்டுக்குப் பெரிய அச்சுறுத்தல் என அறிவித்துள்ளது. அத்துடன் இக்கிருமியால் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை அந்நாடு வழங்கியுள்ளது. பிரைட்டனின் தெற்குப் பகுதியில் மருந்தகம் ஒன்றின் ஊழியர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் அந்த மருந்தகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. லண்டன்: புதிய கொரோனா கிருமித்தொற்று பொதுச் சுகாதாரத்துக்கு பெரும் மிரட்டல் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. கிருமித்தொற்றுத் தாக்குதலிலிருந்து தவிர்த்துக்கொள்ளவும் தடுக்கவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதன் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. ஏரோ பார்க் மருத்துவமனையும் கென்ட்ஸ் ஹெல் பார்க்கும் தனிமைப்படுத்தும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
4 வெளிநாட்டு சேகரிப்பு முகாம்கள்
வூஹான்: கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் வூஹான் மருத்துவ ஊழியர்களுக்கான மருத்துவத் தளவாடங்களைச் சேகரித்து அனுப்ப அந்நகராட்சி, வெளிநாடுகளில் உள்ள நான்கு நகரங்களில் மையங்களை அமைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ், சிக்காகோ, நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம், தென் கொரியாவின் இஞ்சியோன் ஆகியவற்றிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

