பேங்காக்: தாய்லாந்தில் உள்ள கடைத்தொகுதி ஒன்றுக்குள் புகுந்து ராணுவ வீரன் ஒருவன் அங்கிருந்தவர்களை நோக்கிச் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பினார்.
இந்த வெறிச்செயலால் குறைந்தது 29 பேர் உயிரிழந்ததோடு சுமார் 60 பேர் காயமடைந்தனர்.
'டெர்மினல் 21' கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் தமது 11 வயது மகனுடன் சிக்கிக்கொண்ட திரு டே யோங் ஹுவீ, அந்த ராணுவ வீரனுக்கு மிக அருகில் இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவனது கண்பார்வையிலிருந்து தப்பினார்.
32 வயது ராணுவ வீரனான ஜக்ரபந்த் தொம்மா, துப்பாக்கிச்சூடு நடத்தியபோது துப்பாக்கியிலிருந்து குண்டு பாயும் வாசனையைத் தம்மால் நுகர முடிந்ததைத் திரு டே நினைவுகூர்ந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், தாய்லாந்துப் பாதுகாவல் அதிகாரிகளின் உதவியோடு திரு டே பாதுகாப்பாக மீட்கப்பட்டார். தாய்லாந்து நாட்டவரான தமது மனைவி, மூத்த மகன் ஆகியோருடன் அவர்கள் மீண்டும் இணைந்தனர்.
அதிலிருந்து ஆறு மணி நேரம் கழித்து, அக்கடைத்தொகுதியில் திரு டே ஒளிந்துகொண்டிருந்த அதே தளத்தில் அந்தச் சந்தேக ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அங்குள்ள தேவாலய உறுப்பினர் ஒருவர், நேற்று முன்தினம் இந்தக் கொடூர நிகழ்வை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து இது வெளிச்சத்திற்கு வந்தது.
அக்கடைத்தொகுதியில் அந்த ராணுவ வீரரின் வெறிச்செயல் தொடங்கியதைத் தொடர்ந்து கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் திரு டேயும் அவரது மகனும் ஒளிந்துகொள்வதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேடியதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டது.
எனினும், அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது.
சார்ஜண்ட்-மேஜர் பதவி வகித்த அந்த ராணுவ வீரன், ராணுவத்தில் மேலதிகாரி ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அவரைக் கொன்றுவிட்டு, அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ராணுவ வாகனம் ஒன்றில் 'டெர்மினல் 21' கடைத்தொகுதிக்கு விரைந்தான்.
வாரயிறுதி என்பதால், அக்கடைத்தொகுதியில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ராணுவ உடை அணிந்திருந்த அவன், கடைத்தொகுதியில் இருந்தவர்களை நோக்கிச் சரமாரியாக சுடத் தொடங்கினான். இச்சம்பவம், தாய்லாந்து மக்களை அதிரவைத்துள்ளது.

