ராணுவ வீரர்களைப் பாதுகாக்க நடவடிக்கை

ராணுவ வீரர்களைப் பாதுகாக்க நடவடிக்கை

2 mins read
58f6c08c-3510-4d90-afb8-5d356b9790b0
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கான எச்சரிக்கை நிலை ஆரஞ்சை எட்டியதும் சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தெக்கோங் தீவில் அடிப்படை ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு முன்பு உடல்வெப்பநிலையை சோதித்து அவற்றைத் தங்கள் பயிற்றுவிப்பாளரிடம் காட்டும் வீரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ராணுவ முகாம்களில் கொரோனா கிருமி பரவாதிருக்க புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஆயுதப்படை நடைமுறைப்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்களின் உடல்வெப்பநிலையைப் பரிசோதிப்பது, வெவ்வேறு நேரங்களில் உணவு இடைவேளைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

சிங்கப்பூர் ஆயுதப்படை வாடகைக்கு எடுத்திருக்கும் பேருந்து களையும் படகுகளையும் துப்புரவு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற சமூக நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெக்கோங் தீவில் உள்ள அடிப்படை ராணுவப் பயிற்சி மையத்துக்கு தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் நேற்று சென்றிருந்தார்.

ராணுவ வீரர்களை கொரோனா கிருமித்தொற்றிலிருந்து பாது காக்கும் நடவடிக்கைகளை அவர் பார்வையிட்டார்.

கிருமித்தொற்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிங்கப்பூரைத் தற்காப்பதே சிங்கப்பூர் ஆயுதப் படையின் கடமை என்று தெரிவித்த திரு ஹெங், அதே சமயத்தில் ராணுவ வீரர்களின் உடல் நலத்தையும் பேணிக் காக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கான எச்சரிக்கைநிலை ஆரஞ்சை எட்டியுள்ளதை அடுத்து ராணுவப் பயிற்சி மையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரு ஹெங் நேற்று பார்வையிட்டார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிங்கப்பூர் ஆயுதப் படை முகாமில் இருக்கும் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டால் அல்லது உறுதி செய்யப்பட்டால் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த திரு ஹெங், பாதிக்கப்பட்ட நபர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவ நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று கூறினார். அதையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று திரு ஹெங் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போது 5,000 வீரர்கள் தெக்கோங் தீவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.