இவ்வாண்டின் சிங்கே ஊர்வலத்தில் பணியில் ஈடுபட்ட சிஸ்கோ அதிகாரிக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகப் பிறகு தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட அந்த சிஸ்கோ அதிகாரி சிங்கே ஊர்வலத்தில் பணியில் ஈடுபட்டபோது கலைஞர்கள், பார்வையாளர்கள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை என்று சிங்கே ஊர்வலத்தை நடத்திய மக்கள் கழகம் நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து, சிங்கே ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் அடித்தள அமைப்புத் தலைவர்
களுக்கும் மக்கள் கழகம் நேற்று வாட்ஸ்அப் தகவல் அனுப்பியது.
ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிங்கே ஊர்வலத்துக்கு முன்னதாக அந்த 37 வயது சிஸ்கோ அதிகாரியின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதாக கழகம் அதில் தெரிவித்தது. அப்போது அவர் உடல்நலம் குன்றியிருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று கழகம் கூறியது.
"சிங்கே ஊர்வலத்தில் பணியில் ஈடுபட்ட சிஸ்கோ அதிகாரிக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்ட செய்தி வெளியானதும் பலர் பதற்றம் அடைந்தனர். இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் விசாரித்ததில் பாதிக்கப்பட்ட அந்த சிஸ்கோ அதிகாரி கலைஞர்கள், பார்வையாளர்
களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது," என்று அந்த வாட்ஸ்அப் தகவலில் மக்கள் கழகம் தெரிவித்தது.
வூஹானிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்த இருவரிடம் தனிமைப்படுத்தப்படுவதற்கான ஆணையைக் கொடுக்க சென்றிருந்ததாகவும் அதை அடுத்து அவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. தனிமைப்படுத்தப்பட்ட வூஹானிலிருந்து வந்திருந்த அந்த இருவருக்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக பிறகு தெரியவந்தது.
கடந்த மாதம் 31ஆம் தேதியன்று அந்த சிஸ்கோ அதிகாரிக்கு கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் இம்மாதம் 2ஆம் தேதியன்று அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதாகவும் அமைச்சு கூறியது. அவர் இம்மாதம் 6ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

