கோலாலம்பூர்: மலேசிய அரசாங்க முதலீட்டு நிறுவன (1எம்டிபி) முறைகேடு தொடர்பில் தலைமறைவாக இருக்கும் ஜோ லோ உட்பட மூவரைக் கைது செய்ய அந்நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
அந்த மூவரும் தப்பித்துவிடாதிருக்க சிவப்பு எச்சரிக்கை விடுக்கும்படி அனைத்துலக போலிசான இன்டர்போலுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லோ டேக் ஜோ என்ற ஜோ லோ, 'பெட்ரோசவூதி இன்டர்நேஷனல் லிமிடெட் (பிஎஸ்ஐ)' நிறுவன இயக்குநர்கள் தாரிக் ஒபைத், பேற்றிக் மகோனி ஆகிய மூவர் குறித்தும் இன்டர்போலுக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.
1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைத்துப் பேசப்படும் 69 மில்லியன் அமெரிக்க டாலர் (286 மில்லியன் மலேசிய ரிங்கிட்) பணம் கைமாறியதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி அம்மூவர் மீது குற்றவியல் சதிக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டிருப்பதாக திருவாட்டி லத்தீஃபா குறிப்பிட்டார்.
"நாங்கள் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துவிட்டோம். ஆனால், அம்மூவரும் நாட்டில் இல்லை. அதனால், அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறோம்," என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ஒபைத்தும் மகோனியும் வெளிநாட்டவர்கள் என்றாலும் அவர்கள் மீது குற்றம் சுமத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
மகோனி மற்றும் ஒபைத்துடன் சேர்ந்து ஜோ லோ சதித்திட்டம் தீட்டி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைத் தவறாக வழிநடத்தினார் என்று 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஷாரோல் அஸ்ரால் இப்ராகிம் கடந்த நம்பவர் மாதம் கூறியிருந்தார்.
இதையடுத்து, 1எம்டிபி முறைகேட்டில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் ஜோ லோவைப் பிடிக்க அனைத்துலக அளவில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சீனா, ஹாங்காங், மக்காவ், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் நாடுகளில் அவர் பதுங்கியிருப்பதாகப் பல தகவல்கள் அண்மையில் வெளியாகின. ஆனால், அவையனைத்தும் பொய்ச் செய்திகள் என மலேசிய போலிஸ் தெளிவுபடுத்தியது.

