ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா கிருமி பாதிப்பை சீனா நேற்று வெளியிட்டது.
புதிய கிருமித் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 2,015.
இந்த எண்ணிக்கை உட்பட சீனாவில் கிருமித் தொற்று 44,653ஐ எட்டியுள்ளதாக சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்துவிடும் என்று நாட்டின் மூத்த மருத்துவ ஆலோசகரான டாக்டர் சோங் நான்ஷானின் கணிப்புக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. 83 வயது டாக்டர் சோங் 2003ஆம் ஆண்டு சீனாவின் சார்ஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றியவர்.
எனினும், 1,100க்கும் மேற்பட்டவர்களைப் பலிவாங்கியுள்ள இந்தக் கிருமித் தொற்று குறித்து அனைத்துலக நிபுணர்கள் எச்சரிகையுடனேயே இருக்கின்றனர்.
புதிதாக கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை சில மாநிலங்களில் குறைந்துள்ளதாகக் கூறிய சீனாவின் முன்னணி மருத்துவ ஆலோசகரான டாக்டர் சோங் நான்ஷான், கிருமித் தொற்று இந்த மாதத்தில் உச்சத்தை அடையும் என்று நேற்று முன்தினம் கூறினார்.
"எப்போது நிலைமை மாறும் என்று என்னால் சொல்ல முடியாது. பிப்ரவரி மாத நடுப்பகுதி முதல் இறுதி வரையில் கிருமித் தொற்று உச்சத்தை அடையும்," என்று கணக்கு மாதிரியை எடுத்துக்காட்டாக கூறி அவர் விளக்கினார். இதில் பருவநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கொரோனா கிருமித்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை கடந்த வாரம் திருத்திய சீனா, அறிகுறியற்ற சம்பவங்களில் மருத்துவ அறிகுறிகள் தென்படும்போது மட்டுமே அவை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியது. இருப்பினும், அரசாங்க தரவுகளில் இதற்கு முன்னர் இத்தகைய அறிகுறியற்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கொரோனா கிருமித்தொற்றால் சீனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை செவ்வாய் அன்று 1,113 ஆனது.
நிலைமை கட்டுக்குள் உள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியபோதும், புதிதாக அடையாளம் காணப்பட்ட கிருமித் தொற்று பயங்கரவாதத்தைவிட மோசமான உலகளாவிய அச்சுறுத்தலைத் தந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கிருமித் தொற்று ஆரம்பித்த சீனாவில் அதன் பாதிப்பு ஒருவேளை உச்சத்தில் இருக்கலாம். உலகின் வேறு பகுதிகளில் இப்போதுதான் தொடங்கியுள்ள பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் டேல் ஃபிஷர் சிங்கப்பூரில் இடம்பெற்ற ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

