மணிலா: தங்களுடனான ராணுவ ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளும் பிலிப்பீன்சின் முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளது அமெரிக்கா.
பிலிப்பீன்ஸ் அரசாங்க அதிகாரிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்ததையடுத்து, அந்நாட்டுடனான 22 ஆண்டுக்கால ராணுவ ஒப்பந்தத்தை பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்ட்டே நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக முறித்துக்கொண்டார்.
180 நாட்கள் முன்னறிவிப்புடன் பிலிப்பீன்ஸ் எடுத்துள்ள இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என்றும் ஏனெனில் அது தனது பலத்தை உயர்த்தவும் ஆசியா-பசிபிக் வட்டாரத்தில் சீனாவுடன் போட்டியிடவும் முயல்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கூட்டுப் பயிற்சிகள், பிலிப்பீன்சில் அமெரிக்க வீரர்களை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தைக் கைவிடுவது என்பது அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளைக் குறைப்பதற்கான பிலிப்பீன்சின் முதல் உறுதியான நடவடிக்கையாகும்.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக இருக்கும் உறவுக்கு இடையில், பிலிப்பீன்சின் இந்த முடிவு 'தவறான திசையை நோக்கிய நடவடிக்கை' என்றார் பென்டகனின் மார்க் எஸ்பர்.
டுட்டர்ட்டே சீனாவுடனான உறவை வலுப்படுத்தி வரும் நிலையில் அவரது இந்த முடிவு, தென்கிழக்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

