கிழக்கு ஆஸ்திரேலியாவில் பேய்மழை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அடுத்து இப்போது பேய் மழை, வெள்ளம் மிரட்டி வருகிறது. சிட்னி அருகே உள்ள பல அணைக்கட்டுகள் நிரம்பி வருகின்றன. பல நாட்களாக கடும் மழை இடைவிடாது பெய்து வரும் சூழலில், மேலும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெள்ளத்தால் கிழக்கு ஆஸ்திரேலியா இப்போது பெரும் அளவில் மிரட்டலை எதிர்நோக்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் அண்மையில் பெரிய அளவில் காட்டுத் தீ மூண்டது. அந்தப் பகுதியில் உள்ள நகர்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. பல மாதங்களாக நீடித்த காட்டுத் தீ காரணமாக 33 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இப்போது கடும் மழை பெய்து வருகிறது. 

சிட்னி நகருக்குத் தெற்கே இருக்கும் நேப்பியான் என்ற அணைக்கட்டு நேற்று முழு கொள்ளளவை எட்டி வழியத் தொடங்கியது. நீர் வழிந்து ஓடியதைக் காட்டும் காணொளிப் படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. 

நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் டல்லோவா, புரோகோ ஆகிய நகர்களில் உள்ள இதர அணைக்கட்டுகளும் வழிகின்றன. வரும் நாட்களில் மேலும் பல அணைக்கட்டுகள் நிரம்பி வழியத் தொடங்கும் என்று நியூ சவூத் வேல்ஸ் நீர்வளத் துறை பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அண்மைய நாட்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ள நீர் பாதிப்பு இடங்களில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள். 

குவீன்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை ஓரமாக ஓடும் ஒரு ஆற்றில் ஆடவரின் உடல் ஒன்று மிதந்த தாக போலிஸ் தெரிவித்தது. என்றாலும் அந்த ஆடவரின் மரணத்துக்கான காரணம் பற்றி தெளிவாகத் தெரியவில்லை.  

இதனிடையே, லார்ட் ஹோவ் தீவு போன்ற தொலைதூர சுற்றுலா இடங்களில் கடும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்து இருக்கிறது. 

குவீன்ஸ்லாந்து, நியூ சவூத் வேல்ஸ் மாநிலங்களிலும் மழையும் புயலும் தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அந்த வட்டாரங்கள் இப்போதுதான் காட்டுத்தீ பாதிப்புகளில்  இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன. அதற்குள்ளாக அங்கு அடுத்த மிரட்டல் தலைதூக்கி இருக்கிறது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவசரகால சேவைகள் அறிவுறுத்தி உள்ளன.