இலங்கை ராணுவத் தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

இலங்கை ராணுவத் தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

1 mins read
1f780e1b-19e4-4640-a054-3d3be085900b
கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி கொழும்பு நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா(நடுவில்). அமெரிக்காவுக்குள் நுழைய இவருக்கும் இவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

வா‌ஷிங்டன்: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது அவ்வட்டாரத்தில் முக்கிய ராணுவப் பிரிவுக்கு அவர் தளபதியாக செயல்பட்டார்.

அப்போது பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த நிலையில் ‌‌ஷவேந்திர சில்வா மீதான போர்க்குற்றங்களை சுட்டிக்காட்டி அவருக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, ஐநாவும் மற்ற அமைப்புகளும் ‌‌ஷவேந்திர சில்வா மீது சுமத்திய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

திரு ஷவேந்திர சில்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவில் நுழையத் தடை என்று அவர் சொன்னார்.

போரின்போது வடக்கே தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களை அரசாங்கப் படைகள் கைப்பற்றியபோது 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக வலதுசாரிக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

இதில் சில்வாவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு ஷவேந்திர சில்வா ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டபோது அனைத்துலக அளவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.