அதிபர் அசாத்துடைய படைகளின் கட்டுப்பாட்டில் அலிப்போ நகரம்

1 mins read
a8bada78-d308-465e-8c67-1d92ca801d79
அலிப்போ நகரில் வந்து இறங்கும் சிரியா அதிபர் அசாத்தின் ராணுவ வீரர்கள். போராளி களைத் தேடிக் கொல்லும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. படம்: ஏஎஃப்பி -

டமாஸ்கஸ்: சிரியாவின் அலிப்போ நகரின் வடமேற்கில் உள்ள பல இடங்களைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துவிட்டதாக அந்நாட்டின் ராணுவம் நேற்று அறிவித்தது.

அப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் போராளி அமைப்புகளை முற்றிலும் அழிக்கும் பணிகளில் அது தீவிரம் காட்டி வருகிறது.

போராளிகளைக் கண்டதும் சுட்டுக்கொல்ல சிரியா ராணுவ வீரர்கள் அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

அலிப்போவையும் சிரியாவின் தலைநகரமான டமாஸ்கசையும் இணைக்கும் எம்5 நெடுஞ்சாலையிலிருந்து போராளிகளை அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகள் விரட்டியடித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து பல இடங்களை சிரியா ராணுவம் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது. பல ஆண்டு போருக்குப் பிறகு முக்கியமான இரண்டு நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையை அதிபர் அசாத்தின் படைகள் மீண்டும் திறந்துள்ளன.

இது அவர்களுக்குக் கிடைத்துள்ள உத்திபூர்வ வெற்றி என்று கருதப்படுகிறது.

ரஷ்ய ஆகாயப் படையின் தாக்குதலுடன் அலிப்போவில் உள்ள கிராமப்புறங்களைக் கைப்பற்ற சிரியா ராணுவம் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கடுமையாகப் போராடி வந்தது.

இந்த சண்டையின் காரணமாக ஆயிரக்கணக்கான சிரியர்கள் துருக்கியுடனான எல்லைப்பகுதிக்கு தப்பி ஓடியுள்ளனர்.

இந்தச் சண்டையின் காரணமாக துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு கசந்துள்ளது. அதிபர் அசாத்துக்கு எதிரான போராளிகளுக்குத் துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது.