புத்ரஜெயா: சீனாவின் வூஹானில் இருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்ட 105 மலேசியர்களுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள பந்தர் என்ஸ்டெக்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திலிருந்து அவர்கள் நேற்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வெளியேற்றப்படுவதாக துணைப் பிரதமர் தெரிவித்தார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து மலேசியர், அவர்களது உறவினர்கள் என 107 பேரை கடந்த 4ஆம் தேதி மலேசிய அரசாங்கம் தனி விமானம் மூலம் அழைத்து வந்தது. பரிசோதனையில் கிருமித் தொற்று இல்லாதது உறுதி செய்யப்படாத இருவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே சரவாக்கில் ஐந்து பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மாநில பேரிடர் நிர்வாகக் குழு கூறியுள்ளது.

