முதியோர் தேவைகளுக்காக இயங்கி வரும் அறநிறுவனம் ஒன்று, கொரோனா கிருமித்தொற்றால் ஏற்படக்கூடிய அச்சம், மனஅழுத்தம் ஆகியவற்றைச் சமாளிக்க இணையம்வழி ஆலோசனை வழங்கி வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களை 'ஃபேஸ்புக் லைஃப்' மற்றும் 'ஸூம்' தளம் ஆகியவற்றின் மூலம் 'பிராஹம் செண்டர்' நடத்தி வருகிறது.
"தற்போதைய நிலை பலரையும் அச்சுறுத்தலாம். அதனால் இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் வழி மக்கள் சற்று நிதானித்துத் தங்களின் மனதை அமைதிப்படுத்திக்கொள்ளலாம்," என்று பகிர்ந்துகொண்டார் பிராஹம் செண்டரைச் சேர்ந்த திருவாட்டி ஏஞ்ஜி சியூ.
அறநிறுவனத்தில் இவர் ஆற்றிய தொண்டுக்காக 2019ஆம் ஆண்டின் தலைசிறந்த சிங்கப்பூரர் என்று அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சால் அங்கீகரிக்கப்பட்டவர்.
இவர் 2012ஆம் ஆண்டில் தொடங்கிய இந்நிலையம், மூத்த குடிமக்களுக்கு இலவச சுகாதாரக் கல்வியை வழங்கி வருகிறது. அத்துடன் தேவைப்படுவோருக்கு மனரீதியான ஆதரவையும் தந்து உதவுகிறது.
மூன்று இடங்களில் 30 ஊழியர்களுடன் இயங்கி வரும் அறநிறுவனம், அதன் நான்காவது நிலையத்தை இவ்வாண்டு தெம்பனிஸ் வட்டாரத்தில் திறக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

