லிபியத் துறைமுகத்தில் ஏவுகணைத் தாக்குதல்

திரிப்போலி: லிபியத் தலைநகர் திரிப்போலியில் உள்ள துறைமுகத்தை  ஜெனரல் கலிஃபா ஹவ்டாரின் தலைமையிலான போராளிகள் நேற்று தாக்கினர்.

இந்தத் தாக்குதலை அனைத்துலக அங்கீகாரம் கொண்டுள்ள லிபிய அரசாங்கம் கண்டித்துள்ளது. தாக்குதலின் விளைவாக போராளிகளுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று லிபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை ஐநா நடத்தி வருகிறது.

போராளிகள் துறைமுகத்தைத் தாக்கியதை அடுத்து, அங்கிருந்த எண்ணெய்க் கப்பல்களை உடனடியாக வெளியேற்றியதாக லிபியாவின் தேசிய எண்ணெய்  நிறுவனம் கூறியது.

போராளிகளால் பாய்ச்சப்பட்ட ஏவுகணையிடமிருந்து அந்த எண்ணெய்க் கப்பல்கள்  நூலிழையில் தப்பியதாக அது கூறியது.

“திரிப்போலி துறைமுகத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகப் பெரிய மனிதாபிமான, சுற்றுப்புறப் பேரிடரை ஏற்படுத்தியிருக்கும்.

“நகரத்தில் எரிபெருள் கிடங்கு வெடித்திருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கும்.

“மருத்துவமனைகள், பள்ளிகள், மின்சார நிலையங்கள், மற்ற சேவைகள் ஆகியவை உடனடியாகப் பாதிக்கப்பட்டிருக்கும்,” என்று நிறுவனத்தின் தலைவர் முஸ்தஃபா சனால்லா தெரிவித்தார்.